அதிமுக கூட்டணியில் 80 சீட்... துணை முதல்வர் பதவி... தவெக பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையா?

vijay-spoke-alliance-with-admk-is-that-true
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-18 21:02:00

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார். கட்சியை ஆரம்பித்த விஜய் தனது கட்சியின் கொள்கையை முதல் மாநில மாநாட்டில் அறிவித்தார். இதில், தனது ‘‘அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்?’’ என்பதை வெளிப்படையாக அறிவித்த விஜய், திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் தவெக பற்றியே பேச்சுகள் தொடர்ந்து எழுந்துவருகிறது. குறிப்பாக தவெக கூட்டணி பற்றி பல்வேறு வியூகங்கள் வெளியாகின. அதிலும், விஜய் அறிவித்த ‘‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’’ என்பது விசிகவை தன் கூட்டணிக்கு வரவேற்கவே என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் தெளிவான விளக்கத்தை கொடுத்தார்.

நடிகர் விஜய், தவெக எனும் கட்சியைத் துவங்கி தனது கொள்கைகள், அரசியல் எதிரி மற்றும் கொள்கை எதிரி உள்ளிட்டவற்றை அறிவித்தார். மேலும், அந்த மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக விமர்சித்த விஜய், அதிமுகவை நேரடியாக விமர்சிக்கவில்லை. இதன் காரணமாக அதிமுகவுடன் விஜயின் தவெக கூட்டணி என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. அதிலும், தவெக - அதிமுக இடையே தொகுதி பங்கீடு வரை சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க தவெக சார்பாக விஜய் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். துணை முதல்வர் பதவி மற்றும் 80 சீட்டுகளை விஜய் அதிமுகவிடம் கேட்டு பேசி வருகிறாராம். 80 : 154 பார்முலாபடி அதிமுகவிற்கு 154 இடங்களை விட்டுத்தர விஜய் தயார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என்றும், முற்றிலும் தவறான செய்தி என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி…

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next